நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி இன்று வியாழக்கிழமை காலை நுவரெலியா மத்திய பொருளாதார காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த வருடம் இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக அதிகமான பிரதேசங்களில் ஏராளமான பயிர்கள் அழிவடைந்துள்ளது. இதன் காரணமாகவே நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறி வகையில் விலை அதிகரித்து காணப்படுகின்றது. அத்துடன் நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக கொள்வனவு செய்யப்பட்டது அவ்வாறு பெறப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றன. காரணம் தேவைக்கேற்ப கரட் இல்லாத காரணத்தால் அத்துடன் அதிக விலை காரணமாக விளைச்சலுக்கு உகந்த நிலையில் இல்லாத கரட்களையும் அறுவடை செய்யப்படுகின்றது.
கடந்த வருடங்களில் நுவரெலியா மத்திய பொருளாதரத்திலிருந்து ஏனைய வெளி மாவட்டங்களில் உள்ள பொருளாதார நிலையத்துக்கு நாளொன்றுக்கு 35 ஆயிரம் கிலோ கிராம் கரட் ஏற்றுமதி செய்யப்பட்டது ஆனால் தற்போது குறைவடைந்து ஒரு நாளுக்கு ஐந்தாயிரம் ஆறு ஆயிரம் போன்ற அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது இதனால் மத்திய நிலையத்தில் தொழில் புரிந்த 200-க்கும் அதிகமானவர்கள் தற்போது தொழில் இழந்து நடுவீதியில் நிற்கின்றன.
இதுபோலவே ஏனைய மரக்கறி வகைகளும் சீரற்ற கால நிலை ஏற்பட்டு அழிவடைந்த காரணத்தால் அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைகளுக்கே விற்பனை செய்யப்படுகின்றது அவைகளும் சிறந்த தரத்தில் இல்லை என்பதும் உண்மையான விடயம் என தெரிவித்தார்.
டி.சந்ரு செ.திவாகரன்