காஸா போா் முடிவுக்கு வந்ததும் தனி பாலஸ்தீன நாட்டை அமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாஹு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது,
காஸாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலின் தீவிரத்தைக் குறைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அங்கு இஸ்ரேலுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் வகை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்.
ஹமாஸ் அமைப்பினா் முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட்டு, அவா்களால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போா் ஓயாது.
அதுபோல், போா் முடிவுக்கு வந்ததும் தனி பலஸ்தீன நாடு அமைக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த யோசனையை நாங்கள் நிராகரித்துவிட்டோம் என்றாா் நெதன்யாஹு .
பலஸ்தீனப் பகுதியில் குடியேறி வந்த யூதா்கள், இஸ்ரேல் உருவாக்கத்தை 1948-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தாா்கள். அதனை ஐ.நா. அங்கீகரித்தது. இருந்தாலும், இதனை பலஸ்தீன தேசியவாத அமைப்புகளும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.
இஸ்ரேலும், பலஸ்தீனா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனி பலஸ்தீன நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.
இந்தச் சூழலில், ஒரு தனி பலஸ்தீன நாட்டுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிா்த் தரப்பினரும் அங்கீகாரம் வழங்கி இரண்டும் தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று உலக நாடுகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், தனி பலஸ்தீன நாட்டை ஏற்க முடியாது என்று அமெரிக்காவிடம் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது