(நா.தனுஜா)
சில பொலிஸ் அதிகாரிகளால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அவமானங்கள் குறித்து வெளிப்படுத்துவதற்கான தைரியம் பாதிக்கப்பட்ட பலருக்கு இருப்பதில்லை. ஆனால் பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நாம் குரலெழுப்பாவிடின், முறைகேடான சில பொலிஸ் அதிகாரிகளின் மோசமான நடத்தையினால் வெகுவிரைவில் நாட்டுமக்கள் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக உணருவார்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார்.
பொலிஸாரின் அண்மையகால நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அவர், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
அண்மையில் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் சில பொலிஸ் அதிகாரிகளால் தனது மகன் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டார் என்பது பற்றி தந்தையொருவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று தனது நண்பரொருவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட நபர் (மகன்) இரவு 8.45 மணியளவில் கொள்ளுப்பிட்டி சோதனைச்சாவடியில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்த பொலிஸாருக்கும் கரும்புள்ளியை ஏற்படுத்தக்கூடியவகையில் ஒருசில பொலிஸ் அதிகாரிகளால் பொதுமக்கள் எவ்வாறு ஒடுக்குமுறைகளுக்கும், மீறல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் மாத்திரமேயாகும். அதேபோன்று கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் அதிகாரிகளின் வன்முறை செயற்பாடுகளும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கும் இந்நாட்டுப்பிரஜைகளின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது என்பதற்கும் இதுவோர் உதாரணமாகும். இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு மேலிருக்கும் உயரதிகாரிகள் இதுபோன்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்துவதுபோல் தெரிகின்றது.
கடந்த வருடம் காலியில் இளைஞரொருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதுடன், பின்னர் அந்த இளைஞர் ஆயுதங்களை வைத்திருந்தார் என பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதேபோன்று சில மாதங்களுக்கு முன்னர் பின்னரவு வேளையில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவையனைத்தும் சில உதாரணங்கள் மாத்திரமேயாகும்.
சில பொலிஸ் அதிகாரிகளால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அவமானங்கள் குறித்து வெளிப்படுத்துவதற்கான தைரியம் பாதிக்கப்பட்ட பலருக்கு இருப்பதில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரால் நிகழ்த்தப்படும் இத்தகைய அடாவடித்தனங்களுக்கு எதிராக இந்நாட்டுப்பிரஜைகள் என்ற ரீதியில் நாம் குரலெழுப்பாவிடின், முறைகேடான சில பொலிஸ் அதிகாரிகளின் மோசமான நடத்தையினால் மக்கள் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.