முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைவதற்கு சம்மதம் வெளியிட்டுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துகொள்வதை குறிக்கும்வகையில் நாளை காலிமுகத்திடலில் பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் இடம்பெறவுள்ள நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை சந்திரிகா குமாரதுங்கவிற்கு வழங்க முன்வந்துள்ளார், எனினும் சந்;திரிகா குமாரதுங்க இது குறித்து இன்னமும்பதிலளிக்கவில்லை எனவும் சுதந்திரக்கட்சி வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு கட்சியில் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதிக்கு கட்சியில் வழங்கப்படவுள்ள பதவி அதிகாரங்கள் குறித்த இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுகுழுவினதும் மத்திய குழுவினதும் கூட்டங்கள் நாளை இடம்பெறவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.