Our Feeds


Thursday, January 25, 2024

News Editor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கண்டிக்கு விஜயம்


 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கண்டி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.


கண்டி மாவட்டத்திற்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வரவேற்றார்.


இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் மத்திய மாகாண ஆயுர்வேத மருத்துவத் திணைக்களத்தின் வழிகாட்டலினால் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமை இதன்போது ஆரம்பித்து வைத்தார்.


அதனையடுத்து, கண்டி ஹந்தான ஸ்ரீ வாணி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.


அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடன் தீர்க்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டதுடன், அதனை அமுல்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.


அதன் பிறகு, கண்டி ஹந்தானை மேற்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டதுடன் வீட்டு திட்டத்தின் பயனாளர்களுடன் கலந்துரையாடினார்.


இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மக்கள் மேலும் இவ்வாறான வீடமைப்புத் திட்டங்களை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.


அத்தோடு, கண்டி கித்துள்முல்ல பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நில தயார்படுத்தலையும் பார்வையிட்டுள்ளார்கள்.


இதன்போது, உயர்ஸ்தானிகரின் மனைவி, கன்சியூலர் திரு.எல்டோஸ் மாத்தியூஸ், உதவி உயர்ஸ்தானிகர் வைத்தியர் ஆதிரா மற்றும் வருகை தந்த இந்திய அரசின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


(எஸ்.கணேசன்)          

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »