இலங்கை - தனுஷ்கோடி இடையே இந்திய மதிப்பிலான ரூ.25,000 கோடி செலவில் பாலம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய மத்திய அரசு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, கடலில் வானர சேனையால் பாலம் கட்டப்பட்டது. அனுமன் தலைமையில் வானர சேனைகளால் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் திரும்பியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இக்கடலில் தீர்த்தமாடி சீதை மணலில் பிடித்து வைத்த சிவலிங்கத்தை, ராமர் வழிபாடு செய்ததால் இப்பகுதிக்கு ராமேஸ்வரம் என்ற பெயர் வந்தது என்றும், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கடலில் உள்ள மணல் திட்டுகளே ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, தனுஷ்கோடி – தலைமன்னார் (இலங்கை) இடையே கடலுக்கு மேல் பாலம் கட்டும் திட்டம் குறித்து இந்திய – இலங்கை அரசுகள், கடந்த சில ஆண்டுகளாக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடலில் ரூ.25 ஆயிரம் கோடியில் இத்திட்டத்தை நிறைவேற்ற, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் திட்டமிடப்பட்டு இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதனிடையே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி 21ம் திகதி தனுஷ்கோடிக்கு சென்றார். அங்கு அரிச்சல்முனை ராமசேது தீர்த்தக் கடலில் தீர்த்தம் தெளித்து புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்றதை தொடர்ந்து, தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே பாலம் கட்டும் திட்டம் குறித்து இருநாட்டு அரசுகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பிலான ரூ.25 ஆயிரம் கோடியில் கடலில் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.