தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் 25 மாவட்ட அலுவலகங்களும் இந்த வருட இறுதிக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்தின் நிலைக்கு மேம்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, செயற்திறன் மிக்க போக்குவரத்து சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதே எமது அமைச்சின் பிரதான நோக்கமாகும்.
எமது நாட்டில் சுமார் 8.9 மில்லியன் வாகனங்கள் பாவனையில் உள்ளன. அதேபோன்று சுமார் 85 இலட்சம் சாரதி அனுமதிப்பித்திரம் பெற்றுள்ளனர். சாரதி அனுமதிப்பித்திரங்களை வழங்கும் அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெரஹெர தலைமை அலுவலகத்தின் தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏப்ரல் மாதத்திற்குள் விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பித்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று அனைவருக்கும் சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்க அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாரதிகளுக்கு விபத்துகளின் போது செயற்படுத்த வேண்டிய முதலுதவிகள் தொடர்பில் தெளிவூட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையின்போது முதலுதவி தொடர்பான வினாக்களை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பழமையான மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை முன்வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கேட்ப போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் செயற்பாடு மாத்திரமே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கை மேல்மாகாணத்திலும் தென்மாகாணத்திலும் செயற்படுத்தப்பட்டது. இவ்வருடம் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்” என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.