நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டுள்ளார். எனவே இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வரலாற்று சிறப்புமிக்க மக்களாணையினை வழங்கி அடுத்த 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
தங்காலை நகர மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2024 தேர்தல் ஆண்டாகும். முதலில் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே இடம்பெறவுள்ளது. அந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் தேசிய வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெறச் செய்து இந்த நாட்டின் தலைவராக்கும் பொறுப்பு எமக்குள்ளது என்பதை நான் நினைவூட்டுகிறேன்.
இன்று இந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா இந்த நாடுகளின் நன்மதிப்பைப் பெறாவிட்டால் வீழ்ந்த நாட்டை உயர்த்த முடியாது.
அதனால்தான் அவர் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் மிகவும் கடினமானதொரு பாராளுமன்றத்துடன் செயற்பட்டு வருகின்றார். தனி ஒரு எம்.பி.யாக வந்தவர். தனக்கு சாதகமற்ற பாராளுமன்றம் இருக்கும் நிலையிலேயே அவர் அரச தலைவராக செயல்படுகிறார். நாடு முழுவதும் செல்லாமல் இந்த அரசியலை நிர்வகிக்க முடியாது.
கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் பொறுப்பை ஏற்றார். லிபியாவின் பொருளாதாரம் சரிந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் போராடினார். உலகில் ஒவ்வொரு நாடும் வீழ்ந்த போது எதிர்க்கட்சித் தலைவர் முன் வந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர். எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டைப்பொறுப்பேற்றாரா? இப்போது அடுத்த நான்தான் தலைவர் நான் தான். தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்கத் தகுதியானவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் அந்த சவாலை ஏற்க முடியாது என்றால் அவர் நாட்டின் தலைவராக இருக்க தகுதியற்றவர். மேலும் இன்று தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு நபர்கள் உள்ளனர்.
ரணிலுடன் மோதுவதற்கு இந்த நாட்டில் மாற்றுத் தலைவர் இல்லை. நாட்டின் துரதிஷ்டவசமாக இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரத்தையோ பலத்தையோ கொடுக்கவில்லை. அவர் எப்போதும் இரண்டாவதாக இருந்தார்.
இந்த நாடு வீழ்ந்த போது கொண்டு வந்து ஜனாதிபதி கதிரையில் அமர வைத்தார்கள். இப்போது அவர் நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல உழைத்து வருகிறார். அப்படியானால் அடுத்த 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும்.
எனவே 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் நாட்டை வெற்றிகொள்ளும் ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கும் பொறுப்பு அம்பாந்தோட்டை மக்களுக்கு உள்ளது. இது தவிர்க்க முடியாத பொறுப்பு அந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.