பெருந்தோட்டப்பகுதிகளில் 51 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன், நாட்டின் ஏனைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவானோர் இந்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடந்த ஆண்டு முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியானது நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உலக உணவுத்திட்டமும், உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து 2022 ஆம் ஆண்டு மேமாதம் மேற்கொண்ட பயிர்ச்செய்கை மற்றும் உணவுப்பாதுகாப்பு மதிப்பீட்டு ஆய்வில் 28 சதவீதமானோர் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது.
அதனையடுத்து மேற்படி இரு அமைப்புக்களாலும் கடந்த ஆண்டு மார்ச்சில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கை மற்றும் உணவுப்பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு ஆய்வில் 17 சதவீதமானோர் உணவுப்பாதுகாப்பான்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டதுடன், அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் தென்பட்டது. அதன்மூலம் உணவுப்பொருள் நுகர்வின் அளவு மேம்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச்சில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆய்வின்போது நேர்காணல் செய்யப்பட்ட 8,741 குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த ஆண்டு ஓகஸ்ட் - ஒக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உலக உணவுத்திட்டத்தினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாய்வின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் 24 சதவீதமான குடும்பங்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருந்தன.
பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகங்களைச்சேர்ந்த குடும்பங்கள் நாளாந்தம் உட்கொள்ளம் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டமையே இதற்குப் பிரதான காரணமாக அமைந்தது.
அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் உணவு சார்ந்த மாற்று உத்திகளைக் கையாளும் குடும்பங்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.
மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் 51 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன், நாட்டின் ஏனைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவானோர் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(நா.தனுஜா)