Our Feeds


Tuesday, January 9, 2024

News Editor

மின் கட்டணம் செலுத்தாத 10 இலட்சம் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு - காஞ்சன


 மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊடக கண்காட்சிக்காக எதிர்க்கட்சித் தலைவர் மின்கட்டண குறைப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து  64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின்  மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை.

எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும்.

மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானம் கடந்த மாதம் 05 ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரத்துடன் எடுக்கப்பட்டது.

கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனை ஊடக காட்சிப்படுத்தல் என்றே குறிப்பிட வேண்டும்.ஊடக காட்சிப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சித், தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »