Our Feeds


Wednesday, December 13, 2023

Anonymous

JUST_IN: இந்திய பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அத்துமீறி நுழைந்த இருவர் – நடந்தது என்ன?

 



புதுடில்லியில் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவைக்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதுடில்லியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பாராளுமன்ற தினம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பிறகே பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவைக்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்த நபர்கள் மக்களவைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கண்ணீர் புகை வீசும் குப்பிகளை வைத்திருந்ததுடன், அவர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் மேசைகள் மீது தாவி சென்றார். எதிர்ப்பு முழக்கமும் எழுப்பினார்.


அவரைப் பிடிக்க சில எம்.பி.க்கள் முயன்றனர். பின்னர் இருவரையும் பாதுகாவலர்கள் பிடித்து கைதுசெய்தனர். இந்த சம்பவம் காரணமாக மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.


இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் நிற புகையை வெளியிட்டு போராட்டம் நடத்திய 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கருத்து தெரிவிக்கையில்,


கூட்டத்தொடரின்போது, ஒரு நபர் மக்களவையின் மேசைகளின் மீது குதித்தார். மற்றொருவர் பார்வையாளர் அரங்கில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் குப்பி மூலம் மஞ்சள் நிற வாயுவை திறந்து விட்டதை பார்க்க முடிந்தது.


2001ல் உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவு நாளை இன்று அனுஷ்டிக்கிறோம். எனவே, இது நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான் – என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »