Our Feeds


Sunday, December 10, 2023

News Editor

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்


 நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த மின்சாரத் தடையின் ஊடாக நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் தரமான மற்றும் துல்லியமான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

திடீர் மின் துண்டிப்பு காரணமாக நேற்று நாடு முழுவதும் இருளடைந்திருந்தது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் அன்றாட மக்கள் வாழ்க்கைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் சிக்கலானதாகும்.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டமை போன்றே குடிநீர் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் நோயாளிகளும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். கைத்தொழில் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் பாதுகாப்பற்ற நிலை காணப்பட்டது.

அது தொடர்பில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  எவர் மீதும் குற்றஞ் சாட்டுவது எமது நோக்கமல்ல. எனினும் இந்த பாதிப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மின்சாரத்துக்காக அதிக பணம் செலவழிக்கும் நாட்டில் பாரிய பாதுகாப்பின்மைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். 

அத்துடன் இந்நாட்டுக்கு உகந்த மின்சார கட்டமைப்பு தேவை. மின்சார சபை மறுசீரமைப்பின்போது மின்சார சபையை தனியாருக்கு மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் பேரழிவு நிலை உருவாகலாம். 

எனவே, ஒரு மின்கடத்தி பழுதடைந்ததன் காரணமாக முழு நாட்டின் மின்சார கட்டமைப்பும் எவ்வாறு தடைப்பட்டது என்பது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை தேவை இந்த மின்சாரத் தடையின் ஊடாக நேற்று  நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் தரமான மற்றும் துல்லியமான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை நாட்டுக்கு ஏற்படக் கூடாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »