Our Feeds


Sunday, December 3, 2023

SHAHNI RAMEES

இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமையை தெரிவு செய்வோம் - தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். 

ஆரம்பத்திலிருந்தே புதிய தலைமைக்கான தெரிவானது வாக்கெடுப்பின்றி நடைபெறவேண்டும். அதுவே கடந்த காலங்களில் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜா தற்போது தலைமைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக்கட்சிக்கான புதிய தலைமையானது எதிர்வரும் மாதம் நடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ள பொதுச்சபையின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளது. இதற்காக எமது கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பங்களை செயலாளரிடத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

என்னைப்பொறுத்தவரையில், எனது அரசியல் வாழ்க்கையில் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டிகள் காணப்பட்டாலும் எப்போதும் வாக்கெடுப்பு வரையில் சென்றதில்லை. அவ்விதமான நிலைமைகள் சில வேளைகளில் கட்சியை கூறுபோடுவதற்கு வழிவகுக்கும் நிலைமைகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளன. 

ஆகவே, தலைமைப்பதவிக்கான தெரிவின்போது, வாக்கெடுப்பின்றி சுமூகமான அடிப்படையில் தெரிவினை நிறைவு செய்வதை நோக்காக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். 

விசேடமாக, தலைப்பதவிக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களிடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய தலைமையை தெரிவு செய்யும் அதேநேரம் அந்த தலைமையின் கீழ் கட்சி மேலும் வலுவாக தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் என்பதே நோக்கமாக உள்ளது என்றார்.

மாவைக்கு புதிய பதவி

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தற்போதைய தலைமைப்பதவியை இழக்கும் பட்சத்தில் அவருக்கு தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் என்ற பதவி வழங்கப்படுவதோடு அவரே கட்சியின் ஏழுபேர் கொண்ட அரசியல்குழுவிற்கும் தலைமையை வகிக்கும் வகையிலான ஏற்பாடொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைந்தே பயணிப்போம் என்கிறார் சுமந்திரன்

அதேநேரம், எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு இருவர் மட்டும் தான் போட்டியிடுகின்றார்கள் என்பது தவறானது என்றும், ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் பலர் தலைமைத்துவத்தை வகிக்கவல்லவர்களாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

அதுமட்டுமன்றி, தற்போதைய நிலையில் இருவர் விண்ணப்பங்களைச் செய்துள்ள நிலையில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு நிறைவடைந்த பின்னர் பொதுச்சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்கு அமைவாக தெரிவு செய்யப்படும் தலைமையுடன் இணைந்த பயணம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

எனினும், சிவஞானம் சிறீதரன், கட்சித்தலைமைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததன் பின்னர் டில்லிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இந்த விடயம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடுவதற்கு சாத்தியமான நிலைமைகள் காணப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »