Our Feeds


Wednesday, December 27, 2023

SHAHNI RAMEES

யாழ். பல்கலை மாணவி உயிரிழப்பு - அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

 

யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி டிசம்பர் 23ம் திகதி உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி உயிரிழந்தார்.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »