Our Feeds


Friday, December 1, 2023

SHAHNI RAMEES

டயனா,ரோஹன,சுஜீத பெரேரா ஆகியோருக்கு ஒரு மாத காலம் சபை அமர்வில் கலந்துக்கொள்ள தடை விதிக்க பரிந்துரை

 


பாராளுமன்ற வளாகத்தில் 2023.10.20 ஆம் இராஜாங்க

அமைச்சர் டயனா கமகே,மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  ரோஹன பண்டார மற்றும் சுஜீத்  ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படியில் மூவரையும் ஒரு மாத காலத்திற்கு சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்குமாறு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள்  பற்றிய குழு சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளது.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற  அமர்வின் போது பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ குழுவின் முதலாவது அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்தார்.


இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜீத் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 2023.10.20 ஆம் திகதியன்று  இடம்பெற்ற மோதல் தொடர்பிலான விசாரணைக்குழுவின் அறிக்கையிலேயே  இவ்விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது


இது தொடர்பாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


சம்பவம் தொடர்பான ஒலி நாடாக்கள் மற்றும் காணொளி நாடாக்களை கண்காணிக்க ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்ததுடன் அதற்கமைய குறித்த காணொளி பதிவுகளை குழு ஆய்வு செய்தது. பாராளுமன்ற வீடியோ பதிவுகளில் ஒலி பதிவு செய்யப்படாததால்இ சமூக ஊடக வலையமைப்புகளில் பரப்பப்பட்ட ஒலி நாடாக்கள் மூலம் வீடியோ காட்சிகளை கண்காணிக்க குழு முடிவு செய்தது குழு தொடர்புடைய வீடியோக்களை அவதானித்தது.


ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு பின்னர் சம்பந்தப்பட்ட விசேட குழுவினால் பெறப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் குழுவினால் அவதானிக்கப்பட்டது. டயனா கமகேயை  மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துவது குழுவின் ஏகமனதான தீர்மானமாகும் ,


கே. சுஜித் சஞ்ஜய பெரேராவின்    எதிர்வினை குறித்து கடுமையாக எச்சரிக்கப்பட வேண்டும் என குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களினால் தீர்மானிக்கப்பட்டதுடன் அவரை இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்றக் அமர்வுகளில்  பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துவதற்கு குழுவின் ஒரு உறுப்பினராலும் அவரை இரண்டு மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துவதற்கு குழுவின் இரண்டு உறுப்பினர்களாலும் சபாநாயகரால் கடுமையாக எச்சரிக்கப்படுதல் வேண்டும் என நான்கு உறுப்பினர்களாலும் தீர்மானம் எட்டப்பட்டது.


காணொளியை  ரோஹண பண்டார  சமூகமயப்படுத்தியதால்  டயனா கமகே க்கு ஏற்பட்ட அவதூறுகளை கவனத்தில் எடுத்ததுடன்இ  ரோஹண பண்டார வை 2வாரங்களுக்கு பாராளுமன்றக் அமர்வுகளில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துவதற்கு குழுவின் 5 உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டதுடன் அவரை ஒரு மாத காலம் பாராளுமன்றக் அமர்வுகளில்  பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துவதற்கு குழுவின் 2 உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டது.இவற்றிற் கவனத்தில் கொண்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு பின்வரும் பரிந்துரைகளை செய்கின்றது


பரிந்துரைகளைத் தீர்மானிக்கும் போது விஜித பேருகொட குழு கூட்டத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இங்கு குழு உறுப்பினர்கள் இரு பிரிவுகளின் கீழ்  தங்கள் தீர்மானங்களை எடுத்தனர்.


விஜித பேருகொட, தாரக பாலசூரிய,  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,ஜயந்த கெட்டகொட மற்றும், சமன்பிரிய ஹேரத் ஆகியோர்  டயனா கமகே, ரோஹண பண்டார மற்றும்  கே. சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துதல் வேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.


பாராளுமன்ற உறுப்பினர்களான  கபீர் ஹஷீம்,  ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தலதா அதுகோரல ஆகியோர் சபாநாயகரால்  நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.தவிசாளரான  சமல் ராஜபக்ஸ மேற்படி தீர்மானம் தொடர்பில் தனது கருத்தை வெளியிடுவதை தவிர்த்துக்கொண்டார்.


அதன் பிரகாரம் பெரும்பான்மையான குழு உறுப்பினர்களின் முடிவின் பிரகாரம்  டயனா கமகே,  ரோஹண பண்டார மற்றும் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 1953 இன் 21 ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 28 ஆம் பிரிவின்படி ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துதல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.


உறுப்பினர்கள் பெரும்பான்மைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்துதல் வேண்டும் என ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு பரிந்துரைக்கின்றது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »