இந்த வாரம் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று மரணங்கள் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பாரிய இடைவெளியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
பதுளை காதி நீதிவானும் பிரபல எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அஷ்ஷெய்க் ரிஸான் ஸெய்ன் கடந்த ஞாயிறன்று மரணித்த செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த அவர் தனது 6 பிள்ளைகளையும் சிறந்த ஆளுமைகளாக வளர்த்தெடுத்துள்ளார். இதனால் அவர் முன்மாதிரிமிக்க தந்தை என பலராலும் வர்ணிக்கப்பட்டார்.
பதுளையில் ஒக்ஸ்போர்ட் தனியார் கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்து மாணவர்களின் கல்வி வாழ்வில் தாக்கத்தைச் செலுத்திய அவர் சிறந்த உளவளத்துணையாளராகவும் பணி செய்து வந்தார்.
ஜாமிஆ நளீமியாவில் கல்வி கற்ற காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் அவர் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இறுதிக் காலத்தில் காதி நீதிவான் பதவிக்கு தெரிவான அவர் பதுளை காதி நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துகள் தொடர்பில் கவலையுற்று அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிவாசல்கள் ரீதியாக மேற்கொண்டு வந்தார். இந் நிலையிலேயே அவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் எம்மை விட்டும் பிரிந்துள்ளார். தனது அறிவு மற்றும் ஆளுமைகளால் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் கால்பதித்து இயங்கிய இவரின் இழப்பு எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாததாகும்.
அதேபோன்றுதான் சிரேஷ்ட ஊடகவியலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் மருதமுனை நிருபருமான பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களின் மறைவாகும்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை வேளையில் எம்மை விட்டும் பிரிந்தார். 2008ல் விடிவெள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் தான் சுகவீனமுறும் வரை 15 வருடங்களுக்கும் மேலாக விடிவெள்ளிக்காக ஊடகப் பணி செய்த அவரின் பங்களிப்பு மெச்சத்தக்கதாகும்.
மக்களின் பிரச்சினைகளைத் தேடிச் சென்று அறிக்கையிட்ட அவரது பணி பிராந்திய செய்தியாளர்களுக்கு முன்மாதிரியானதாகும். இதற்காக அவர் இரு முறை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் அதிஉயர் ஊடக விருதையும் வென்றிருக்கிறார். சுனாமி அனர்த்தத்தின் போது கூட அக்காட்சியை தனது கமெராவுக்கு அடக்க முயற்சித்து மயிரிழையில் உயிர்தப்பினார்.
தனது அனைத்து உடைமைகளையும் இழந்த போதிலும் மீண்டும் எழுந்து நின்று ஊடகப் பயணத்தைத் தொடர்ந்த அவரது தைரியம் மெய்சிலிர்க்க வைப்பதாகும். அந்த வகையில் பி.எம்.எம்.ஏ. காதரின் இடைவெளியை அப்பகுதியில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள் நிரப்ப வேண்டியது அவசியமானதாகும்.
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் முனீர் அவர்களின் மரணச் செய்தியும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக அமைந்தது. ஆர்ப்பாட்டமின்றி மிக அமைதியாக மார்க்கப் பணி செய்த அன்னார் இஸ்லாஹியா மூலம் நூற்றுக் கணக்கான பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் நேரடியாக பங்களிப்புச் செய்தவர்.
அவரது அல்குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க வகுப்புகள் உள்ளத்தில் ஊடுருவித் தாக்கம் செலுத்துவதாகவே எப்போதும் அமைந்திருக்கும். தனது அறிவு ஆற்றல் மூலமாக புத்தளத்தில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் தாக்கம் செலுத்திய அவரது இழப்பும் ஈடுசெய்ய முடியாததாகும்.
மேற்படி மூவரதும் மரணங்கள் தொடர்பில் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு மனிதனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள நாம் இவ்வாறான நல்ல மனிதர்களின் மரணங்களிலிருந்து படிப்பினை பெற்று அதற்கமைய நமது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நாம் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியாகும்.- Vidivelli