Our Feeds


Tuesday, December 19, 2023

SHAHNI RAMEES

வரி செலுத்தாத தனவந்தர்களின் சொத்துகளை முடக்குங்கள் - சம்பிக்க எம்.பி. கோரிக்கை

   



‘நாட்டில் 05 கோடி ரூபாவுக்கு அதிகம் வரி செலுத்தும் பட்டியலில்

2ஆயிரத்து 500 தனவந்தர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பெற வேண்டிய வரியை முறையாக அறவிட இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்தால் 50 சதவீத வருமானத்தை வரிகள் எதுவுமின்றி, இலகுவாக அடைந்துவிட முடியும். வரி செலுத்தாத தனவந்தர்களின் வங்கிக் கணக்குகளையும் சொத்துக்களையும் முடக்கியாவது அவற்றை சேகரிக்க இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


 


ஆனால் அதனை செய்யாமல் பெறுமதி சேர் வரி என்ற போர்வையில் மக்கள் மீது சுமையை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


 


மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டே இதனைக் குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து, சிசுக்களிலிருந்து முதியவர்கள் வரையில் பெறுமதி சேர் வரியினூடாக (வற்) மாத்திரம் 35,000 ரூபாவை அறவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கோடிக்கணக்கான வருமானத்தை இறைவரித் திணைக்களம் சேர்க்கவில்லை. இதுவே, இறைவரித் திணைக்களத்தின் இன்றைய நிலைமையாகும்.


 


வர்த்தகர்கள் வரி செலுத்தாமையே அதற்கு பிரதான காரணமாகும். அதற்கு இறைவரித் திணைக்களம் அவர்களின் வங்கிக் கணக்குகளையும் சொத்துகளையும் முடக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்தே அவர்களிடமிருந்து வருமானத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அதனை செய்வதற்கு இவர்கள் தயார் இல்லை.


 


அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து வரவேண்டிய வரியை மக்களின் மீதே சுமத்துகிறார்கள். எந்தவொரு வரி அறவீடும் இன்று நாட்டின் வருமானத்தை 50 சதவீதத்தால் அதிகரிக்க முடியும். எமது நாட்டில் வரி செலுத்தாத செல்வந்தர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சிறந்த வாகனங்களில் செல்கிறார்கள். வசதிகள் நிறைந்த வீடுகளில் வசிக்கிறார்கள். தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். அவ்வாறானவர்கள் நத்தார் பண்டிகையையொட்டி வெளிநாடுகளுக்கு செல்லவும் தயாராகிவிட்டார்கள். ஆனால், இவர்களை பற்றி யாரும் தேடிப்பார்ப்பதில்லை.


 


இவர்களின் வருமான வரி சரியான முறையில் எந்தவொரு இடத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு இலகுவான பதில் கிடைத்து விடும். வைத்தியர் ஒருவரின் சம்பளம், பொறியியலாளர் ஒருவரின் சம்பளம், ஆசிரியர் ஒருவரின் சம்பளம் பதிவு செய்யப்படுகிறது. அதனால் அவர்களினால் தப்பிக்க முடியாது. ஆனால் தனவந்தர்களின் வருமானம் பதிவு செய்யப்படுவதில்லை. அந்த பதிவுகளை முறைப்படுத்தினால் புதிய வரிகளை அறவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஆறு மாதங்களில் இவர்களின் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலகுவாக செய்து முடிக்க முடியும்.


 


சிறியளவானவர்களே தனவந்தர்களாக இருக்கிறார்கள். 5 கோடி ரூபாவுக்கு அதிகம் வரி செலுத்தும் பட்டியலில் 2,500 தனவந்தர்கள் எமது நாட்டில் இருக்கிறார்கள். இந்த 2,500 பேரையும் பதிவுப் பட்டியலில் சேர்த்தால், இனந்ததெரியாத 2,500 பேரை அடையாளம் காண முடியும். எமது நாட்டில் வரிப் பிரச்சினை இல்லை. ஒவ்வொரு பொருட்களுக்கும் வரி அறிவிட வேண்டிய அவசியமும் இல்லை. எவ்வாறாயினும், அரசாங்கம் பயத்திலேயே இயங்குகிறது. அதன்காரணமாகவே இந்த நடவடிக்கைகளை முறையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »