(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும்
போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் என்பன பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றால் பொதுமக்கள் எவரேனும் பாதிப்படைந்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அண்மையில் நீதியமைச்சினால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினாலும், அதன்விளைவாக ஏற்பட்ட வன்முறைகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது, நாட்டைப் பொறுப்பேற்று சீரான பாதையில் வழிடத்திச்செல்வதற்கு எவரும் முன்வரவில்லை. இருப்பினும் நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான அமைச்சுக்களைக்கொண்ட அமைச்சரவையை ஸ்தாபித்து பாரிய சவால்களை சிறந்த முறையில் வெற்றிகண்டோம். அதனூடாக பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரநிலைக்குக் கொண்டுவந்தோம்.
அடுத்ததாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்புக்கள் ஒன்றும் புதிதல்ல. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் நாடு மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்தே அண்மையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டோம்.
போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகளால் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம். மாறாக எந்தவொரு தவறையும் செய்யாவிடின், பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கலாம். ஒட்டுமொத்த நாட்டையும் பீடித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார்.