Our Feeds


Thursday, December 28, 2023

ShortNews Admin

பௌத்த விகாரையை அகற்றி, தமிழர் காணிகளை தாருங்கள் - பொதுமக்களும், பிரதிநிதிகளும் வடக்கில் ஆர்ப்பாட்டம்.



வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் பௌர்ணமி தினத்தன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


காங்கேசன்துறை வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகில் உள்ள வீதியோரத்தில் போராட்டத்தை முன்னெடுத்த தமிழர்கள் சட்டவிரோத விகாரையை அகற்று, எமது நிலம் எமக்கு வேண்டும், அமைதியை சீர்குலைக்கும் பொலிஸார் எமக்கு வேண்டாம், போன்ற கோசங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன், திஸ்ஸ விகாரைக்கு வரும் பக்தர்களிடம் புத்தரின் சம்பிரதாயங்களை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


“நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம், எங்களுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள் விகாரைக்கு சென்று நீங்கள் வழிபட்டால், புத்தரே உங்களை சபிப்பார். நாக விகாரைக்கு செல்லுங்கள். இது எங்களுடைய நிலம். உரிமையாளர்களும் இருக்கிறார்கள், பொலிஸார் சட்டவிரோத விகாரைக்கு பாதுகாப்பு வழங்குகின்றார்கள். ஒட்டுமொத்த தலைமுறையும் சாபத்திற்கு உள்ளாகும். தயவுசெய்து இதற்கு அனுமதிக்காதீர்கள். இது புத்தர் போதித்ததல்ல. புத்தரின் வழிகாட்டல்களுக்கு அமைய செயல்படுங்கள்."


தமிழர்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து உள்ளூர் காணி அதிகார சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


"காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது.." என இராணுவம் ஏப்ரல் 29 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.


"கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது" என இராணுவம் கூறுகிறது.


14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


கோவிலை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை மாவட்ட செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »