கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் அப்போதிருந்த
ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களை குறிவைத்தே தீர்மானங்கள் எடுத்தனர். அத்தோடு கடந்த ஆட்சியின்போது அவர்கள் எடுத்த பல்வேறு தீர்மானங்களும் முஸ்லிம் மக்களை குறிவைத்ததாகவே இருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.அத்துடன், இச்செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் மீது பாரிய வன்முறைகளும் கட்டவிழ்க்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கான அறிமுக நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பில் மத மற்றும் கலாசார உரிமைகள் அடிப்படை உரிமையாக அமைந்திருந்தால் கொவிட் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு நடந்த அநீதி இடம்பெற்றிருக்காது. கொவிட் காலப் பிரிவில் அடக்கமா? தகனமா? என்ற பிரச்சினையில் எமது நாட்டு முஸ்லிம் சமூகம் பெரிதும் உதவியற்றிருந்தது.உலக சுகாதார ஸ்தாபனம் கூட கூறாத பல்வேறு முடிவுகளின் அடிப்படையில் இஸ்லாமிய சமூகம் குறிவைக்கப்பட்டு பாரிய வன்முறை முன்னெடுக்கப்பட்டது. அந்நேரத்தில் ஒரு தேசிய கட்சியாக முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கி அந்த உரிமைக்காக நடவடிக்கை எடுக்க முடிந்தமையையிட்டு ஐக்கிய மக்கள் சக்தி பெருமிதம் கொள்கிறது.
நாட்டை ஒற்றுமைப்படுத்துவதாக கூறிய ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்தே தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினர். இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு என கதைத்தாலும் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லாவிட்டால் குறித்த இலக்குகளை அடைய முடியாது.
அனைத்து மக்களிடையே சகோதரத்துவம் பேணப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு இது மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.
நாட்டில் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியமான ஜனநாயக அம்சமாகும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இனவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் இடமில்லை. எதிர்காலத்தில் எமது அரசாங்கத்தில் சாதி, மத பேதங்களை முன்னிறுத்தி செயற்படும் எந்தவொரு நபரும் தகுதி தராதரம் பாராது சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவர்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தேசிய ஒருமைப்பாடு அவசியம். இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழித்து ஒருவருக்கொருவர் அந்நியோன்யமான கலாச்சார பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் மற்றும் நடத்தைகளுக்கு நியாயமான இடத்தை வழங்கி அனைவரினதும் தனித்துவ அடையாளத்தையும் பாதுகாத்து முற்போக்குத் தேசியவாதத்துடன் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என்றார்.-