Our Feeds


Tuesday, December 5, 2023

Anonymous

நீதிபதியின் தோட்டத்தில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு - புத்தளத்தில் சம்பவம்

 



கற்பிட்டி - நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் நபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.முஹம்மது சம்சுல் ராபி உத்தரவிட்டுள்ளார்.


குறித்த தோட்டத்தின் காவலாளி உட்பட புதையல் தோண்டுவதற்கு உதவிய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால் அவர்களுக்கு சொந்தமான 25 ஏக்கர் தோட்டத்திலேயே இவ்வாறு புதையல் தோண்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த தோட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் காவலாளியாக கடமை புரிந்து வரும் சந்தேக நபர், அந்த தோட்டத்தில் குவேனி பாவித்ததாக கூறப்படும் செம்பு வகையைச் சேர்ந்த குடம் ஒன்று புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தேடியே தோட்டத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தோட்டக் காவலாளி உட்பட சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபற்றி, குறித்த தோட்டத்தின் உரிமையாளரான புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால் நுரைச்சோலை பொலிஸில் முறைப்பாட்டு ஒன்றை செய்துள்ளார்.


குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, நுரைச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எஸ். பிரேமசிறி தலைமையிலான பொலிஸ் குழு புதையல் தோண்டப்பட்டதாக கூறப்படும் தோட்டத்தை சுற்றிவளைத்ததுடன், சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ. முஹம்மது சம்சுல் ராபி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ரஸீன் ரஸ்மின்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »