Our Feeds


Friday, December 8, 2023

News Editor

அடுத்த வருடம் அரசியலின் புதிய யுகமாகும் - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க


 அடுத்த வருடம்  அரசியலின் புதிய யுகமாகும். புதிய ஆற்றல் கொண்ட குழுவினர்  அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கசப்பானது என கருதிக் கொண்டு இந்த நாட்டை வலுவடைய செய்ய முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க புதன்கிழமை (06) பிற்பகல் மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே ஸ்ரீ தம்மரதத்ன தேரரிடம் ஆசிப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த விகராதிபதி,  கிரிக்கெட்டை பாதுகாப்பதற்காக அல்லவா நீங்கள் செயற்பட்டீர்கள். இறுதியில் உங்களுக்கு என்ன நடந்தது. அரசாங்கத்தில் உள்ளவர்களே உங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் மோசடிகள். 

நாட்டின் வளங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரிக்கபட இருக்கிறது. 

ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சி காரணமாக நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரச ஊழியர் ஒருவர் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றிருந்தால் அரசியல்வாதிகளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும். 

அத்துடன் அவர்களுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு  செய்யும் முறைமை நாம் இல்லாது செய்ய வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்,

கடந்த காலங்களில் உரம் தொடர்பான பிரச்சினைகள் தோற்றம் பெற்ற போது பதவி விலகினேன். கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சக்தி 

மிக்கதாக காணப்பட்ட போதிலும் நான் 4 கடிதங்களை எழுதினேன். உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை எனவும் அதனை நீக்கி 

கொள்ள வேண்டும் எனவும் கூறினேன். அவர்கள் அது தொடர்பில் பொருட்படுத்தாமையாலேயே பதவி விலகுவதற்கு காரணமாக அமைந்தது.

மேலும் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரிலும் சரி முன்பிருந்த 225 பேரிலும் சரி இலஞ்சம் பெறாத யாரும் இருக்கவில்லை.

இதன் காரணமாகவே இந்த நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறு துன்பப்படுகிறார்கள். இது கண்டிப்பாக மாற்றமடைய வேண்டும். அடுத்த வருடம்  அரசியிலின் புதிய யுகமாகும். 

இதற்கு அறிவான தெளிவான புதிய ஆற்றல் கொண்ட குழுவினர் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும். 

இவர்கள் தாம் கற்றுக் கொண்டதை வைத்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். இவர்கள் இலங்கையில் இருக்க முடியும். அல்லது வெளிநாடுகளிலும் இருக்க முடியும்.

தாம் உழைத்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தவராக இருந்தால் கட்டாயம் நாட்டுக்காக வருகை தருவார்கள். அரசியல் கசப்பானது என கருதிக் கொண்டு இந்த நாட்டை வலுவடைய செய்ய முடியாது என்றார்.

 (எம்.வை.எம்.சியாம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »