“மஹர சிறைச்சாலை பள்ளியை மீளத்திறக்க ஜனாதிபதி நடவடிக்கை
எடுக்க வேண்டும்” – பள்ளிவாசல் வளாகத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூரியதாவது,
“மஹர பிரதேசத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 1903ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்காக கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல், கடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவ தினத்திலிருந்து இன்று வரை மூடப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் 100 வருட காலத்துக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட இந்தப் பள்ளிவாசலிலே, இப்பிரதேச முஸ்லிம்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றி வந்தனர். இங்கு வாழ்கின்ற சுமார் 350க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் தமது மார்க்கக் கடமைகளில் ஈடுபட முடியாமல் கஷ்டப்படுகின்றனர். ஐவேளை தொழுகைக்காக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஜும்ஆ தொழுகை மற்றும் ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்காக மார்க்க கடமைகளை முன்னெடுக்க முடியாத ஒரு துரதிஷ்ட நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறான பல கஷ்டங்களுக்கு அவர்கள் நாளாந்தம் முகங்கொடுத்து வருகின்றனர்.
எனவே, இந்தப் பள்ளிவாசலை மீண்டும் அவர்களுக்கு வழங்குமாறு இங்கு வந்து நாம் வேண்டிநிற்கின்றோம். இது சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்தில் பேசியபோது, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எமக்கு வழங்கிய பதில் ஏற்புடையதாக இல்லை. அதனால், ஜனாதிபதியிடம் இந்த விடயத்தை முன்வைத்திருக்கின்றோம். ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் தலையீடு செய்து, இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். மஹர பள்ளிவாசலை அந்த மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் பிரதேச மக்கள் தொழுகை நடாத்துவதற்காகப் பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்குப் பொருத்தமான காணியை வழங்க வேண்டும். இரண்டில் ஒன்றை அவசரமாகச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
இதேவேளை, மஹர பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் எம்மோடு இங்கு வந்திருக்கின்றனர். நான்கு வருட காலமாக இவர்களது பிரச்சினையை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், கேட்பார்பார்ப்பார் அற்ற நிலையில் இந்தப் பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இங்கு வாழும் மக்கள் மிகவும் மன வேதனையில் உள்ளனர். எனவே, இந்தப் பள்ளிவாசலை உடனடியாக மீண்டும் வழங்குமாறு அவர்கள் வினயமாக கேட்டுநிற்கின்றார்கள்.
ஆகையால், ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் தலையீடு செய்து, உடனடியாக இந்தப் பள்ளிவாசலை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.
இந்த விஜயத்தின் போது மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.