இராஜதுரை ஹஷான்)
வடக்கு புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படும்.
கொழும்பில் இருந்து செல்லும் யாழ் நிலா புகையிரதம் திருகோணமலைக்கு செல்லும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதியில் அநுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் யாழ் நிலை புகையிரதம் அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று,திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி புறப்படும் என்றார்.