Our Feeds


Tuesday, December 5, 2023

News Editor

நுண்நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கான புதிய சட்டமூலம் விரைவில் - விஜயதாச ராஜபக்ஷ


 இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு புற்று நோயாக மாறியுள்ளதாகவும், மத்திய வங்கியின் ஊடாக அன்றி தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக அந்த நிறுவனங்களை கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, 


நீதி அமைச்சிற்கு 21 நிறுவனங்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் சட்ட அமுலாக்கம், சட்ட மறுசீரமைப்புப் பணிகள் உட்பட பல்வேறு துறைகள் அடங்குகின்றன. இந்நாட்டு நீதிமன்றங்களில் 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. நீதிமன்றங்களில் உள்ள இந்த வழக்குகள் தாமதமாகாமல் இருக்க கடந்த காலங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில வழக்குகளுக்குத் தீர்வு காண இணக்க சபைகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.


குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்க்க உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் மிகவும் காலாவதியான சட்டக் கட்டமைப்பே உள்ளது. எனவே, ஒரு குற்றவியல் வழக்கை நிறைவுசெய்வதற்கு அதிக காலம் எடுக்கின்றது. குற்றவியல் வழக்குகளில் ஏற்படும் காலதாமதம் ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளது. அந்த வழக்குகள் தாமதமாவதால் யாருக்கும் நீதி கிடைக்காது. இதனால், இரு தரப்பினரையும் சமரசம் செய்து, குறைந்த தண்டனையுடன் வழக்கை நிறைவு செய்ய வாய்ப்புள்ளது. இது அனைவருக்கும் பயனளிக்கிறது.


குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சில அபிவிருத்தி அடைந்த நாடுகளில், சிறிய குற்றம் புரிபவர்கள்  சிறையில் அடைக்கப்படுவதில்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் செய்யாத தவறுக்காக சிறைக்கு செல்கிறார்கள். சமூகத்தின் தவறுகளால் சிலர் சிறைக்குச் செல்கிறார்கள். இதனால் அவர்களை பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்க வாய்ப்பு உள்ளது.



காணாமல் போனோர் அலுவலகத்தில் சுமார் 14,000 முறைப்பாடுகள் உள்ளன. இந்த அமைச்சை நாங்கள் பொறுப்பேற்ற போது 62 முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இன்றைய நிலவரப்படி 4795 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. நீதித்துறை செயல்முறையை மேலும் வலுப்படுத்தவும் செயற்திறன்மிக்கதாகவும் மாற்றும் வகையில் எட்டு புதிய சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.


ஒவ்வொரு கிராமத்திலும் 'நல்லிணக்க' சங்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த 'நல்லிணக்க சங்கத்தில்' அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அந்த நல்லிணக்க சங்கங்களின் பணிகள் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், உயரதிகாரிகள், மதத் தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடனே இடம்பெறும். கிராமத்திற்கு வீதி அமைக்கவும், மின்சாரம் வழங்கவும் அரசியல்வாதிகள் தேவை இல்லை. கிராமத்தின் மத விழாக்கள், விளையாட்டு விழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளை கிராம மக்கள் ஏற்பாடு செய்ய முடியும். அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவையும் ஒரே வலையமைப்பாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பு. நல்லிணக்க சங்கத்தில் யாரும் தலையிட முடியாது. கிராமத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் இந்த நல்லிணக்கச் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


இன்று எல்லோரும் நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய பல்வேறு காரணிகள் உள்ளன. யுத்தத்தினால் நாடு இழந்த உயிர்களும் உடமைகளும் அதிகம். அதேபோன்று, நீதிமன்றங்கள், பேருந்துகள் மற்றும் மின்மாற்றிகள் ஜே.வி.பியினால் எரித்து நாசமாக்கப்பட்டன. அவற்றை எரித்து அழிக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டின் பொருளாதார நிலை வேறுவிதமாக இருந்திருக்கும்.


நுண்நிதி நிறுவனங்கள் இந்த நாட்டிற்கு பெரிய புற்றுநோயாக மாறியுள்ளன.அவை தொடர்பில் எந்தவித சட்டமோ கண்காணிப்பு முறைகளோ இல்லை. மத்திய வங்கியில் கூட பதிவு செய்யப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது மக்களுக்கு கடினமாக உள்ளது. அவர்களுக்கு பல்வேறு சட்டவிதிகள் உள்ளன. அதனால்தான் பெரும்பாலும் இவ்வாறான நுண்கடன் நிறுவனங்கள் மூலம் மக்கள் கடன் பெறுகிறார்கள். மத்திய வங்கிக்குப் பதிலாக, நுண்கடன் நிறுவனங்களை கண்காணிக்கவென்று தனியான நிறுவனம் ஒன்று நிறுவப்பட வேண்டும். நுண்நிதி நிறுவனங்களில் பாரதூரமான மோசடி கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »