இந்த வருடத்தில் 50 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக
தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 84,038 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 38,673 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டிசம்பர் மாதத்தில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 7,550 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 17,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாளாந்தம் சராசரியாக 250 நோயாளர்கள் பதிவாகும் கட்டத்திற்கு நாடு மீண்டும் சென்றுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதோடு, நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.