Our Feeds


Thursday, December 21, 2023

SHAHNI RAMEES

சொத்து குவிப்பு வழக்கு - தமிழக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை

 


சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


 


கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 இலட்சம்(இந்திய ரூபா) சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.


 


இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்து தீா்ப்பளித்தது.


 


இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு 2017-ஆம் ஆண்டு மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90 % அளவுக்கு அமைச்சா் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்புத் சட்டத்தின் கீழ் பொலிஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளன. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டாா்.


 


இந்த நிலையில், இன்று காலை 10.45 மணியளவில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வெளியிட்டார்.


 


அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


 


மேலும், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


 


சொத்து குவித்து வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொன்முடி, அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »