Our Feeds


Sunday, December 3, 2023

SHAHNI RAMEES

தங்க மகனை 3 மாதங்களுக்காவது பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்த வேண்டும் - ரிஷாத் பதியுதீன்

 


பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி தங்கம்

கடத்திய எனது கட்சி எம்.பியை 3 மாதங்களுக்காவது பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்த வேண்டும். அது தொடர்பில் சட்டமா அதிபர் கொடுக்கின்ற அறிக்கை இந்த 225 எம்.பிக்களையும் திருடர்கள், மோசமானவர்கள் என சொல்கின்ற மக்களை இன்னும் ஆத்திரப்படுத்துவதாக அமையக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


இந்த பாராளுமன்றத்தில் ஒருவர் தங்கம், செல்போன்களை கடத்தி கட்டுநாயக்க விமான நிலைய வி.ஐ.பி. வழியூடாக கொண்டு வந்த மிக மோசமான செயலை செய்த வரலாறு இந்த நாட்டில் உள்ளது. அவர் ஒரு இஸ்லாமியன் என்ற அடிப்படையில் நான் வேதனையும் கவலையும் மன வருத்தமும் அடைகின்றேன். 


225 எம்.பிக்களும் எமக்கு வேண்டாம். நீங்கள் தொலைந்து போங்கள், பாராளுமன்றத்திற்கு குண்டு போடுங்கள் என்று நாட்டு மக்கள் கோஷம் எழுப்பும் அளவுக்கு மக்களுக்கு எம்.பி.க்கள் மீது கோபம், வெறுப்பு வந்ததை நீங்கள் அறிவீர்கள். கோத்தபாய துரத்தப்பட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த 225 எம்.பி.க்களும் துரத்தப்படாமல்  இருக்கின்றோம்.


இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக சிறப்புரிமைக்குழுவுக்கு கொண்டு போகப்பட்டது.  அவர் என்னுடைய கட்சியை சேர்ந்தவர். இவ்வாறானவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஒரு மாதம் சபை நடவடிக்கைளுக்கு தடை போடுவதா அல்லது 2, 3 மாதங்களுக்கு தடை விதிப்பதா என்று பேசப்பட்டபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அது அனுப்பப்பட்டுள்ளது.  


எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டமா அதிபர் அது தொடர்பிலான அறிக்கையை கொடுக்க இருக்கிறார். சட்டமா அதிபர் கொடுக்கின்ற அறிக்கை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற வேண்டும். இந்த 225 எம்.பிக்களையும் திருடர்கள், மோசமானவர்கள் என சொல்லுகின்ற மக்கள் இன்னும் ஆத்திரப்படுகின்ற தீர்ப்பாக அது அமையக்கூடாது. எனவே இந்த விடயத்தில் சட்ட மா அதிபர் திணைக்களமும் நீதி அமைச்சும் கவனம் செலுத்த வேண்டும்.


அந்த எம்.பி. 3 மாதங்களுக்கு சபையிலிருந்து நிறுத்தப்படுவதற்கான தீர்ப்பை எழுதி அனுப்ப வேண்டும். அவ்வாறு தீர்ப்பு வருகின்றபோதுதான் இந்த நாட்டுக்கு நல்லது செய்கின்ற பாராளுமன்றமாக இது அமையும்.


அதேவேளை அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நீக்கினால் அவர் ஒரு மாத காலத்துக்குள் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று மனு செய்கின்ற தினத்திலிருந்து 2 மாதங்களுக்குள்  தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், 2 மாதங்களில் தீர்ப்பு எழுத வேண்டிய நீதிபதிகள் 5 மாதங்களுக்கும் மேலாக தீர்ப்பு எழுதாமல் இருக்கின்றனர்.


இந்த பாராளுமன்றம் சட்டத்தை உருவாக்குகின்றது. அரசியலமைப்பை  சாதாரண பொதுமகன் மீறினால் தண்டனை வழங்குகின்றீர்கள். ஒரு உயர் நீதிமன்ற  நீதிபதி இவ்வாறான அரசியலமைப்பை  மீறி செயற்படுவது எந்த வகையில் நியாயம்? எனவே இது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி கிடப்பில் கிடைக்கும் வழக்கிற்கு நேர்மையான தீர்ப்பை எழுதச் சொல்லுங்கள். நீதிபதிகள் அரசியலுக்கு, கட்சிகளுக்கு பின்னால்  செல்ல முடியாது. நேர்மையில்லாத நீதிபதிகளின் பரம்பரை சாபமடைந்ததை நாம் கண்டிருக்கின்றோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »