(எம்.வை.எம்.சியாம்)
போதைப்பொருள் மற்றும் பாதாளாக்குழுக்களை ஒடுக்கும் யுக்திய
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே ஹெரோயின், ஐஸ் உட்பட 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய, முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த 17ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17,666 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருப்பினும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் இரண்டு நாட்களுக்கு யுக்திய சுற்றிவளைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்புகள் கடந்த புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது 2,889 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 850 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 186 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 1,187 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 4,665 சந்தேக நபர்களில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 6 கிலோ 740 கிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோ 500 கிராம் கஞ்சா, ஒரு கிலோ 70 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள், 35 கிலோ 800 கிராம் ஹுஸ் போதைப்பொருள், 3 கிலோ 350 கிராம் தூள் போதைப்பொருள், 18 கிலோ 50 கிராம் மாவா, 71, 271 போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 2,110,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.