Our Feeds


Friday, December 15, 2023

SHAHNI RAMEES

107 கிலோ ஹெரோயின் புத்தளத்தில் அழிப்பு

 

2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 107 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் நேற்று (14) புத்தளம் பாலாவி "இன்சி" சிமெந்து தொழிற்சாலை வளாகத்தில் வைத்து சீமெந்து ஆலை உலையில் எரித்து அழிக்கப்பட்டது. 



புத்தளம் மாவட்ட நீதவான் மிஹில் சிரந்த சத்துருசிங்கவின் முன்னிலையில் குறித்த ஹெரோயின் போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு அழிக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் 321 கோடி ரூபாவைக்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.



கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.



கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 107 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 1 கிலோ 104 கிராம் "குடு" வகையைச் சேர்ந்த போதைப் பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.



மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை அழிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



இவ்வாறு சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையிலேயே, பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விசேட பாதுகாப்பில் கொழும்பில் இருந்து புத்தளம் , பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று அழிக்கப்பட்டது.



அழிக்கப்பட்ட ஹெரோயின் அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் முன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கொள்கலனில் எடுக்கப்பட்ட 500 லீட்டர் தண்ணீரில் கரைக்கப்பட்டு 2300 வெப்பநிலையில் உலைக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.



குறித்த ஹெரோயின் போதைப்பொருள் அழிக்கப்பட்ட புத்தளம் பாலாவி சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



இதன்போது,  வடமேற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோருடன் புத்தளம் சீமெந்து தொழிற்சாலை நிர்வாகமும் ஹெரோயின் போதைப் பொருளை அழிப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.



-ரஸீன் ரஸ்மின்-


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »