Our Feeds


Monday, December 4, 2023

Anonymous

ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம் கொழும்பு அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும் - மனோ கணேசன் MP

 



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச்  வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோருகிறேன். 


இங்கே இடம்பெற்றுள்ள தீவிபத்தில் எட்டு வீடுகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்னமும் நான்கு வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. இங்கே ஏறக்குறைய இருபது குடும்பங்கள் வாழ்வதாக அறிகிறேன். இந்த இருபது குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டிக்கொள்ள தலா பத்து (10) பேர்ச் காணி துண்டுகள் வழங்கப்பட வேண்டும். 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பட்ஜெட் உரையில் பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வீடமைக்க காணி வழங்குவேன் எனக்கூறி, அதற்காக நானூறு கோடி ரூபாயை தனது அமைச்சின் நேரடி கண்காணிப்பில் ஒதுக்கிக்கொண்டுள்ளார். 


ஆகவே எனது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.


கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஏற்பட்டுள்ள தீவிபத்தின் சேதங்களை பார்வையிட சென்ற கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன், ஸ்தலத்தில் இருந்தபடி  ஊடகங்களுக்கு கூறியதாவது,

 

இங்கே அனைவரும் இந்த தோட்டத்தில் பணி புரிபவர்கள் அல்ல. வெளியில் மாற்று தொழில் செய்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். 


ஆனால், அனைவரும் இங்கேதான் பரம்பரை பரம்பரையாக நீண்ட காலம் வாழ்பவர்கள். ஆகவே  தலா பத்து (10) பேர்ச் காணி துண்டுகள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 


சொந்தமாக வருமானம் உள்ளவர்கள் அரசாங்கம் தரும் காணியில் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு அராசங்கம், இலங்கை, இந்திய வீடமைப்பு திட்டங்களின் கீழ் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு. இதுதான் எனது கோரிக்கை. 


தற்சமயம் தற்காலிக தீர்வாக, தோட்ட நிறுவன முகாமையாளர் ஹெட்டியாராச்சி உடன் பேசி உள்ளேன். தீக்கிரையான வீடுகளின் சேதங்களை திருத்தி தர அவர் உடன்பாடு தெரிவித்து பணியை ஆரம்பித்துள்ளார்.  கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜயசிறியிடம் இதோ இங்கிருந்தபடியே நான் தொலைபேசியில் உரையாடினேன். அரச தரப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அவிசாவளை பிரதேச செயலாளர் தில்ஹானியிடமும் உரையாடி உள்ளேன். 


உடைமைகளை இழந்த மக்களுக்கு எனது சார்பில் நிதி வழங்கி உணவு மற்றும் சமையல் பாத்திரங்கள், பாடசாலை உபகரணங்கள் ஆகியவற்றை, அவிசாவளை நகரசபை  உறுப்பினர் சுனில் செய்கிறார். பிரதேசபை உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அவிசாவளை நகர, பிரதேச வலய அமைப்பாளர்கள் உதவிடுகிறார்கள். இது தொடர்பில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மேஜர் பிரதீப் உதுகொட எம்பியிடமும் நான் அறிவித்துள்ளேன். பத்து (10) பேர்ச் காணி துண்டுகள் வழங்கள் தொடர்பில் அடுத்த வார கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாடி முடிவெடுக்க தீர்மானித்துள்ளேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »