இஸ்ரேல் நாட்டில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வொஷிங்டனில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் பேரணியாக சென்றனர்.
இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் இவர்கள் பேரணியாக சென்றனர்.
இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் லைவ் வீடியோ வழியே திரளான கூட்டத்தினரிடம் ஆற்றிய உரையின்போது, ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள குழந்தைகள், சிறுவர்கள், ஆடவர் மற்றும் மகளிருக்காக பேரணி நடத்த இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு யூதரும் பெருமையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைக்காக பேரணி நடைபெறுகிறது என பேசியுள்ளார்.
இந்த பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் பணய கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்தபடி காணப்பட்டனர். அக்டோபர் 7-ந்தேதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வாக இது உள்ளது.
இதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றது. யூதர்களுக்கு எதிரான போக்கை கண்டிக்கும் வகையிலும் மற்றும் பணய கைதிகளை விடுவிக்க கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.