Our Feeds


Thursday, November 2, 2023

Anonymous

GSP + வரிச்சலுகைக்கான நிபந்தனைகளில் புதிதாக இரு விடயங்களை சேர்ப்பது குறித்து ஆராய்வு - ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தகவல்

 



(நா.தனுஜா)


ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்குப் பூர்த்திசெய்யவேண்டிய சர்வதேச கடப்பாட்டு நிபந்தனைகளில் மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணங்கிச் செயற்படக்கூடியவகையில் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடல் ஆகிய இரு விடயங்களையும் சேர்ப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கடந்த திங்கட்கிழமை (30) நாட்டை வந்தடைந்தது.

இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பின்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹெய்டி ஹோற்றாலா, போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஸ்லோ க்ரஸ்நோட் ஸ்கி, ஜேர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ஸ்றென் லுகே மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அவுஸ்ரா மோல்டெய்கினி ஆகிய நால்வரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக மட்ட அதிகாரிகள் இருவரும் என மொத்தமாக அறுவர் உள்ளடங்குகின்றனர்.

இக்குழுவினருக்கும் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் எம்.ஏ.சுமந்திரன், எரான் விக்ரமரத்ன, டலஸ் அழகப்பெரும, சுரேன் ராகவன், பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், குறிப்பாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி தற்போது இலங்கை அடுத்த தவணைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் நிலையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அதனை முன்னிறுத்தி விரிவான மீளாய்வொன்று நடைபெறுமென இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்மீளாய்வின்போது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான சர்வதேச கடப்பாடுகளை இலங்கை பூர்த்திசெய்திருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்படு;ம். அந்தவகையில் வழமையாக ஆராய்வுக்கு உட்படுத்தப்படும் சர்வதேச கடப்பாடுகளில் இம்முறை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனம் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் உட்சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணங்கிச் செயற்படக்கூடியவகையில் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடல் ஆகிய இரு விடயங்களையும் அதில் நிபந்தனையாக சேர்ப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »