இறக்குவானையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் கொடக்கவெல டிப்போவிற்கு சொந்தமான பஸ்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டிலேயே இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் குறைக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு அதிகாலை 4.15 மற்றும் காலை 7 மணிக்கு பல தசாப்தங்களாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் இயங்கி வந்தன.
ஆனால், அதிகாலை 4.15க்கு சேவையில் ஈடுபடும் பஸ் கடந்த ஒரு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், பயணிகள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன், இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு காலை 7 மணிக்கு சேவையில் ஈடுபடும் பஸ் சேவையும் அவ்வப்போது நிறுத்தப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு இதற்கு முன்னர் காலை 8.45ற்கு இயங்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிறுத்தப்பட்டதுடன், அந்த பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
அத்துடன், இறக்குவானையிலிருந்து பதுளை மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கு இயங்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் நிறுத்தப்பட்டதுடன், அந்த பஸ் சேவைகளும் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
மேலும், இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பிற்பகல் 2.15ற்கு சேவையில் ஈடுபடுகின்றது.
எனினும், இந்த பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு சேவையில் ஈடுபடும் பஸ்களை நிறுத்தி, அந்த நேர அட்டவணைக்கு தனியாருக்கு சொந்தமான பஸ் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கொடக்கவெல பஸ் டிப்போவின் பதில்
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு அதிகாலை 4.15 மற்றும் பிற்பகல் 2.15க்கு சேவையில் ஈடுபட்ட பஸ்கள் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கொடக்கவெல பஸ் டிப்போ அதிகாரி ஒருவர் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இந்த பஸ் சேவைகள் அடுத்த வாரம் முதல் வழமை போன்று இயங்கும் என அவர் உறுதியளித்தார்.
தமது டிப்போவில் தற்போது 42 பஸ்கள் உள்ள போதிலும், அவற்றில் 10 பஸ்கள் கோளாறு காரணமாக இயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பஸ்களை திருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கூறிய அவர், அடுத்த வாரம் முதல் அனைத்து பஸ்களும் வழமை போன்று நடாத்தப்படும் எனவும் தெரிவித்தார்.