Our Feeds


Friday, November 24, 2023

SHAHNI RAMEES

BREAKING: கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் இடைக்கால தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு !

 



கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில்

இடைக்கால தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு ! 


மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த வழக்கில் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் அவரது சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இவர்கள் இடைக்கால தீர்வாக கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க செய்ய வேண்டும் என்பது உட்பட இன்னும் மூன்று நிவாரணங்களை கோரியுள்ளனர். 


இது தொடர்பிலான இடையீட்டு தீர்வொன்று கடந்த மேமாதம் 23ம் திகதி கட்டளையாக பிறப்பிக்கப்பட இருந்த நிலையில் மே முதலாம் வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து தங்களை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தை கோரி இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இடையீட்டு தீர்வொன்றை வழங்க கூடாது என்று இடையீட்டு மனுதாரர்களும், இடையீட்டு தீர்வை வழங்க கோரி சுமந்திரன் தரப்பினரும் வாதிட்டு பின்னர் தமது பக்க நியாயங்களை எழுத்து மூல சமர்ப்பிப்புக்களாகவும் செய்திருந்தனர். 


இருதரப்பு சமர்ப்பனங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் இம்மாதம் 15ம் திகதி இடைக்கால கட்டளையை பிறப்பிக்க இருந்த நிலையில் இன்று (24) வரை ஒத்திவைத்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் கௌரவ பந்துல கருணாரத்ன அவர்கள் தனது தீர்மானத்தை மன்றுக்கு அறிவித்தார். அவரது அறிவிப்பில் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் இடையீட்டு தீர்வை கோரிய மனுவையும் அதற்கு எதிரான மனுவையும், வாதங்களையும் பரிசீலித்து ஆராய்ந்த பின்னர் இந்த இடையீட்டு நிவாரணத்தை நிராகரிப்பதாகவும் அந்த தீர்வை வழங்க முடியாது என்றும் மன்றுக்கு அறிவித்திருந்தார். இதனடிப்படையில் 

சுமந்திரன், கலையரசன் தரப்பினர் நீதிமன்றத்தை கேட்டிருந்த இடைக்கால தீர்வை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 


அதே நேரம் வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க எதிர்வரும் 2024.01.17ம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து கடைசி நேரத்தில் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கல்முனை மாநகர முஸ்லிங்களுக்கு ஏற்பட இருந்த இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், பொது அமைப்புக்களின் பிரதானிகளும் கருத்து வெளியிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »