Our Feeds


Thursday, November 16, 2023

Anonymous

ஜனாதிபதி தேர்தலில் “தமிழ்” வேட்பாளர் களமிறங்குகிறார். - சி.வி அதிரடி அறிவிப்பு

 



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தினால் தமிழ் மக்களே பெரும் நெருக்கடிக்கு உள்ளாகுவார்கள். இந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மாகாண சபைகள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் முடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.


அதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் இடம்பெறாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை மீண்டும் சந்திக்க நேரிடும் என்பதுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


சர்வதேச நாணய நிதியத்துக்கு ஏற்றவகையிலும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்துமே இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கூறுவதுபோன்று நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. இதற்கான நிதியை எங்கிருந்து திரட்டப் போகிறார்கள் என்பதும் தெரியாது. அவ்வாறு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கதாகும். அர ஊழியர்களுக்கு 10,000 ரூபாவை மாதாந்தம் வழங்கும்போது பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். ஒருபுறம் தருவதாகக் கூறி மறுபுறம் சுமையாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது மக்களுக்கு எவ்வாறு சாதகத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.


இந்த வரவு செலவுத்திட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மாகாண சபைகளின் செயலாளரினால் நடைமுறைப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு என தனியான அதிகாரங்கள் இருக்கின்றன. 13 ஆவது அரசியலமைப்பினூடாக அவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.


அவ்வாறு இருக்கையில் மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கும் திட்டங்களை இவர்கள் செய்ய வேண்டும் என்றால், மாகாண சபைகள் அனைத்தையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கவே எதிர்பார்க்கிறார்கள்.


அவ்வாறெனில் எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.


ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில், இதில் குறிப்பிடப்படும் விடயத்தை இந்த நிலைப்பாட்டிலேயே நாங்கள் அவதானிக்கிறோம். இவ்வளவு காலமும் கலந்துரையாடி மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு தனியான குழுவை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனால் அந்த குழு தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும் தற்போது இல்லை. மத்திய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மாகாண சபை செயலாளர்களினூடாக நடைமுறைப்படுத்துவதென்றால், வடக்கு கிழக்குக்கு மக்களுக்கான அதிகார பகிர்வு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் போன்றே தெரிகிறது. மத்திய அரசின் அதிகாரத்தை முழு நாட்டிலும் உறுதிப்படுத்தி இராணுவ கட்டுப்பாட்டை கொண்டுவர முயற்சிப்பது போன்றே தெரிகிறது. அதனால், இந்த வரவு செலவுத்திட்டம் தமிழ் மக்களுக்கு பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தும் என்றே கருதுகிறேன்.


இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஒப்புக்கொண்ட விடயங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பது போன்றே தென்படுகிறது. வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டார் என்றே எண்ணுகிறேன்.


அவ்வாறு இடம்பெற்றால் மீண்டும் இந்தியாவிடம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தமாறு கோர நேரிடும். இந்தியாவுடன் கலந்துரையாடியே 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒருதலைப்பட்சமாக அதற்கு எதிராக செயற்பட்டால் இந்தியா இதுதொடர்பில் கேள்வி எழுப்பவும் முடியும். எனவே, இந்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்த அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்பதே தெளிவாகத் தெரிகிறது.


அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் பிரதிநிதியொருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை அவருக்கு வழங்குமாறு கோருவதே அநேகமான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. இவ்வளவு காலமும் நாங்கள் கோரியது எதுவும் முழுமையாக நிறைவேறவில்லை. மாறாக மக்களின் செயற்பாடுகளை இராணுவமே முன்னெடுத்து வருகின்றன. மக்களின் பொருளாதாரத்தை இராணுவம் முன்னெடுத்து வருகிறது. மூன்றில் இரண்டு பங்கு இராணுவத்தினர் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே இருக்கிறார்கள்.


அநேகமானவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கவே எதிர்பார்த்திருந்தார்கள். தற்போது அவ்வாறு வாக்களிப்பார்கள் என்று எண்ணவில்லை. அதன் காரணமாக தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி வாக்குகளை உடைத்து நெருக்கடியொன்றை ஏற்படுத்தவே எதிர்பார்க்கிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இதனை செய்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வரவு செலவுத்திட்டத்திலுள்ள விடயங்களால் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »