விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சில் இன்று திங்கட்கிழமை (20) காலை 07 மணியளவில் புதிய செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டார். சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம், வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டம், மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலைமாணிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள வைத்தியர் மகிபால பல்வேறு சர்வதேச சுகாதார சேவை அமைப்புகளில் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.
கொழும்பு ஆனந்தக் கல்லூரி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் மார்கழி மாதம் 2012ஆம் ஆண்டிலிருந்து தை மாதம் 2017ஆம் ஆண்டுவரை இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகத் திறம்படக் கடமையாற்றியிருந்தார்.
1985ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தின் மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரியாகக் (1998-1992) தமது பொதுமக்கள் சேவையினை ஆரம்பித்த வைத்தியர் மகிபால, மாத்தறை மாவட்ட வைத்திய அதிகாரி (1992-1994), காலி மாவட்ட தாய்சேய் நலன் அதிகாரி (1995), அம்பாந்தோட்டை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (1995-1997), கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் (1997-1998), சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை அலகின் பணிப்பாளர் (1998-2006) மற்றும் பதில் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் (1998-2003), பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பொதுச் சுகாதார சேவைகள்) [2006-2010], மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) [2010-2012] ஆகிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசியப் பிரிவில் தொற்றாநோய் அலகின் இணைப்பாளராக கடமையேற்ற வைத்தியர் பாலித மகிபால சித்திரை மாதம் 2019ம் ஆண்டிலிருந்து கடந்த வாரம் வரை உலக சுகாதார நிறுவனத்தின் பாக்கிஸ்தான் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில், தற்போதைய அவல நிலையிலிருந்து நாட்டின் பொதுச் சுகாதரத்துறையினை மீட்டெடுப்பதற்கு இவரே தகுதியானவர் எனப் பலரும்பரிந்துரைத்தமைக்கு அமைய இலங்கை அரசு விடுத்த கோரிக்கையினை ஏற்று தமது உலக சுகாதார நிறுவன உயர் பதவியை துறந்த வைத்தியர் மகிபால இன்றைய தினம் சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.
இவரது நியமனமானது கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பாரபட்டசமின்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் பயன்களைக் கிட்டச் செய்தமை போன்று இவரது புதிய பதவிக்காலத்திலும் செயற்பட்டு இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பை மீளெழுச்சி கொள்ள வைப்பார் என்ற பாரிய எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.