நாட்டை காட்டிக்கொடுக்கும் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .அத்துடன் கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை,மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்தினார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் 11-11- 2023 இல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ' இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்குமாறு நீங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் கோரிக்கை விடுத்தீர்களா ? ' என ஊடகவியலாளர்கள் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவிடம் கேள்வி எழுப்பிய போது .'தடை விதிக்குமாறு பரிந்துரைக்கும் அளவுக்கு நான் பலமானவர் அல்ல 'என்று ஷம்மி சில்வா பதிலளித்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா நாட்டின் சட்டத்துக்கு முரணாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடந்த 6,7 ,9 ஆகிய திகதிகளிடம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
2023.11.06 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் 'கிரிக்கெட் இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் 'என ஷம்மி சில்வா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கடிதம் ஊடாக முறையிட்டுள்ளார்.