ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக அரச சொத்து சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தை நாடுவ தற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற 52 நாள் அரசியல் சூழ்ச்சியை தோற்கடிப்பதற்கு வழங்கப்பட்ட நீதியான தீர்ப்பின் பின்னர் மீண்டும் நீதியான தீர்ப்பொன்றை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின் பின்னர் தொடர்ந்து நாட்டிலுள்ள வங்குரோத்து நிலைமைக்கு நாங்கள் பொறுப்புக் கூற வேண்டியதில்லை என்று கூறிக்கொண்டு நாடு முழுவதும் கூறித் திரிவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கியமைக்கு அவர்களே பொறுப்பு என்பதை நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, அரச சொத்துக்கள் மீதான முறைகேடு தொடர்பில், அரச சொத்து சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை நாட்டிலுள்ள சட்டத்தரணிகளும் மக்களும் தேடிப்பார்க்க வேண்டும் என்றார்