சிலாபம் – மாதம்பே பகுதியில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவரை, தனியார் பஸ் ஒன்று விபத்துக்குட்படுத்திய சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் நகரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, மாதம்பே பகுதியில் மற்றுமொரு பஸ்ஸை முந்தி செல்ல முயற்சித்த போது மூன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த விபத்தில் காயமடைந்த மூவரும் மாதம்பே மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் விபத்துக்குள்ளானதை அடுத்து, பிரதேச மக்கள் பஸ் மீது தாக்குதல் நடாத்தி, பஸ்ஸை சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, மாதம்பே பொலிஸாருக்கு மேலதிகமாக சிலாபம் மற்றும் தொடுவாவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரதேசத்தில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.