மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் மெத்தன போக்கினை காட்டுகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
இன்றையதினம் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது நீண்ட இடைவெளிக்கு பின்பு இன்று அடுத்த கட்டமாக இடம்பெறுகின்றது.
அரசாங்கம் நினைத்தால் நிச்சயமாக இந்த உடலங்கள் சம்பந்தப்பட்ட ஒரு தெளிவான அறிக்கையை தரலாம் ஆனால் அகழ்வு பணியினை மேற்கொண்டு முடிவுகளை சரியான வழியில் செய்ய வேண்டும் என்று ஏனையவர்கள் கோரிக்கை விடுமளவிற்கு அரசாங்கம் அந்த நடவடிக்கையில் மெத்தன போக்கினை காட்டுவது போல் தெரிகின்றது.
இன்றும் முதலில் நம்பிக்கை இருக்கவில்லை. இருந்தாலும் அதன் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களால் குறித்த பணி நடைபெறுகின்றது. ஆனால் தொடர்ந்தும் அகழ்வு பணி நடைபெற வேண்டும். இதற்கான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பது தான் மக்களுடையதும் எங்களுடையதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும். பொறுப்பு கூறல் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்.
பாலநாதன் சதீஸ்