தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் 34,396 டெங்கு நோயாளர்கள் பதிவானதுடன் மேல் மாகாணத்திலேயே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளனர் .
நவம்பர் மாதத்தின் மூன்று வாரங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 63,540 ஆக உயர்ந்துள்ளதுடன், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் மாதத்தின் கடைசி 18 நாட்களில் மட்டும் 3,844 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார் .
கொழும்பு மாவட்டத்தில் 15,321 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 14,509 டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 4,563 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் .
அத்துடன் மத்திய மாகாணத்தில் 12 சதவீத டெங்கு நோயாளர்களும் வடமேற்கு மாகாணத்தில் 8.5 சதவீத டெங்கு நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 8.2 சதவீத டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . இவ்வாறு டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதற்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் பற்றாக்குறையே காரணமாகும்.
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக தொற்றுநோயியல் பிரிவினால் அதிக ஆபத்துள்ள 45 டெங்கு பரவும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது .
கண்டி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நவம்பர் மாத இறுதியிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் டிசம்பர் மாத நடுப்பகுதியிலும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .