இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் “ஹலால்” தரச்சான்று பெற்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்க சட்ட விதிகளின்படி, ‘ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டவை என்றும் ‘ஹராம்' என்றால் தடை செய்யப்பட்டவை என்றும் பொருள். உணவுகளில் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவு, உண்பதற்கு தடை விதிக்கப்பட்ட உணவு என இரண்டு பிரிவுகளை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.
இந்த ஹழால் மற்றும் ஹராம் சட்ட திட்டங்கள் உணவுகள் தவிர்ந்த வாழ்வின் அனைத்து கட்டங்களுக்கும் பிரித்து விதிக்கப்பட்ட சிறப்பான சட்ட நடைமுறையாகும்.
இஸ்லாமியவர்கள் எதை செய்யலாம் என இஸ்லாம் கூறுகிறதோ அதற்கு ஹழால் எனவும், எதை செய்யக் கூடாது என இஸ்லாம் தடுக்கிறதோ அதற்கு ஹராம் என்றும் சொல்லப்படும்.
ஆனால் இஸ்லாம் அல்லாதவர்களின் பார்வையில் பொதுவாக உணவுகளில் மட்டுமே முஸ்லிம்கள் ஹராம், ஹழால் என பிரித்துள்ளார் என்ற பார்வையிருக்கிறது. அது தவறான கண்ணோட்டமாகும் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் இந்த சட்ட திட்டங்கள் இருக்கின்றன என்பதே யதார்த்தமாகும்.
இந்நிலையில், உலகின் பல நாடுகளிலும் உணவுகளுக்கு ஹழால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
முஸ்லிம்களும் இணைந்து வாழும் நாடுகளில் முஸ்லிம்கள் மத்தியில் தமது வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த ஹழால் சான்றிதழ் நடைமுறையை வியாபார நிறுவனங்கள் கைக்கொள்கின்றன.
எந்தவொரு உணவாக இருந்தாலும் அதில் அங்கீகரிக்கப்பட்ட ஹழால் முத்திரை இருந்தால் பெரும்பாலும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வது வழமையான நிலையாக உள்ளது. ஹழால் முத்திரை வழங்கும் நிறுவனங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் மேற்பார்வையில் செயல்படும் நிறுவனங்களாக இருக்கிற காரணத்தினால் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக இலங்கையிலும் ஹழால் சான்றிதழ் பிரச்சனை பூதாகரமாக உருவானதை நாம் அறிவோம். இந்நிலையில் தான் தற்பொது இதே பிரச்சினை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்திலும் உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் ‘ஹலால்' தரச்சான்று சட்டப்பூர்வமாக நடைமுறையில் இல்லை. எனினும் சில தனியார் நிறுவனங்கள் உணவு, மருந்து, அழகு சாதன பொருட்களுக்கு ‘ஹலால்' தரச் சான்றுகளை அளித்து வருகின்றன.
இது தொடர்பாக உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த சைலேந்திர குமார் சர்மா என்பவர் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில், "ஹலால் இண்டியா பிரைவேட் லிமிடெட் - சென்னை,
ஜமாத் உலமா ஹிந்த் அறக்கட்டளை - டெல்லி,
ஹலால் கவுன்சில் ஆப் இந்தியா- மும்பை,
ஜமாத் உலமா - மும்பை
ஆகிய அமைப்புகள் பல்வேறு பொருட்களுக்கு 'ஹலால்' தரச்சான்றுகளை அளித்து வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரினார். இது தொடர்பாக லக்னோ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச அரசு நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் ஹழால் தரச்சான்றிதழுக்கு தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் ‘ஹலால்' தரச் சான்று பெற்ற பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் இந்த தடை வரம்புக்குள் வராது. என குறித்த உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
‘ஹலால்' தரச் சான்று நடைமுறை சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.
இதன்படி ‘ஹலால்' தரச் சான்று நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 10 லட்சம் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம். என உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.