Our Feeds


Wednesday, November 29, 2023

News Editor

கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலக பிரிவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாமலிருப்பதற்கு அதிகார பயங்கரவாதமே காரணம் - ஹக்கீம்


 மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்று வரும் அதிகாரிகளின் பயங்கரவார நடவடிக்கையால் கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலக பிரிவு 20 வருடமாக இன்னும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

அதனால் அங்கு இடம்பெறும் அதிகாரி பயங்கரவாதத்தை இல்லாதொழித்து கோரளைபற்று மத்திய பிரதேச செயலக பிரிவை வர்த்தமானி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலக பிரிவுகள் புதிதாக நியமிக்கப்பட்டன. அவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலக பிரிவுகளுல்  கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகம் இன்னும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பூமிப்பிரதேசம் முறையான அளவுகோல்களுக்கு அமைய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே காலப்பகுதியில் சட்ட ரீதியில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த பிரதேச செயலகத்துக்கான வர்த்மானி மாத்திரம் 20 வருடங்களாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.

இந்த விடயம் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் அங்கு இடம்பெற்று வரும் அதிகாரவாதமாகும். உண்மையாக சொல்வதாக இருந்தால் அதிகாரி பயங்கரவாதமே இடம்பெற்று வருகிறது.

ஆயுதங்களால் முகங்கொடுக்கக்கூடிய பயங்கரவாதிகளைவிட அதிகாரிகளின் பயங்கரவாதம் தீவிரமானது.

சட்ட ரீதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த பிரதேச செயலக பிரிவுக்கு உரித்தான பூமி பிரதேசத்தை நிர்வாகிக்க இடமளிக்காமல் 20 வருடங்களாக தடுத்து வரும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? இந்த அதிகாரிகள் இனவாதமாக செயற்படுவதாக நான் தெரிவிக்க முற்படுவதில்லை.என்றாலும் முஸ்லிம் பிரதேசத்துக்கு மாத்திரம் இந்த அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதுதான் பிரச்சினையாக இருந்து வருகிறது.

அத்துடன் இந்த பிரதேச செயலக பகுதியில் பல தொழிற்சாலைகள். நிறுவனங்கள் இருக்கின்றன.

அங்கு இடம்பெறுவேண்டிய  அளவீட்டு நடவடிக்கைகள், தொகை மதிப்பு நடவடிக்கைகள் போன்ற விடயங்களை கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக அதிகாரிகளே மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

இது முற்றிலும் சட்டத்துக்கு முரணான செயலாகும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட வரத்தை அந்த பிரதேச செயலக பிரிவு மக்கள் அனுபவிக்காமல் தடுத்து வரும் இந்த அதிகாரிகள் மீதே நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.

இந்த அதிகாரிகளின் செயற்பாடு காரணமாக அந்த பிரேச மக்கள் ஒருமைல் தூரத்துக்கு சென்று தங்கள் அலுவல்களை முடித்து வரமுடியுமாக இருக்கின்றபோதும் 30 மைலுக்கு அப்பால் உள்ள கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

வேண்டுமென்றே இந்த நிர்வாக பயங்கரவாதம் இடம்பெற்று வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வை காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »