Our Feeds


Wednesday, November 8, 2023

SHAHNI RAMEES

நுவரெலியா தபால் நிலையம் தாஜ் சமுத்ரா நிறுவனத்துக்கு அமைச்சர் பந்துல அறிவிப்பு..!

 

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.



அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



கடனில்லா வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. பயன்படுத்த முடியாத மிகவும் பழைமையான கட்டடமாக நுவரெலியா தபால் நிலையம் இருக்கிறது. இவ்வாறு பயனில்லாமலிருக்கும் இந்த கட்டடத்தை பயனுடையதாக்குவதற்கான யோசனை ஜனாதிபதிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.



நுவரெலியா அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரதேசமாக இருப்பதால், அந்த பிரதேசத்தில் தமது ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டல் யோசனை முன்வைத்துள்ளது. அதனூடாக அந்த பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரம், தொழில்வாய்ப்பு என்பவற்றை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. தபால் அமைச்சர் என்ற வகையில் இந்த யோசனைக்கு நான் இணங்குகிறேன்.



எனவே, தபால் நிலையத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டு அந்த இடத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலின் வேலைத்திட்டத்துக்காக பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். இதனைவிட வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் கூட உயர் சுற்றுலா ஹோட்டல்களாக மாறியுள்ளன. அதனூடாக அந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கான தொழில்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்துக்கு இணங்குகிறேன்.

சங் ரிலா ஹோட்டலுக்கு காலி முகத்திடலிலுள்ள அரச காணியை விற்பனை செய்தததன் பின்னர், எந்தவொரு காணியையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால், எந்தவொரு இடமும் அரச வேலைத்திட்டங்களுக்காக வரிக்கு பெற்றுக்கொடுக்கப்படும். விடயபொறுப்பு அமைச்சர் என்ற வகையில் எந்தவொரு நேரத்திலும் புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பெந்தோட்டை, ஹிக்கடுவ மற்றும் அநுராதபுரம் போன்ற புகையிரத நிலையங்களுக்கு அருகில் புகையிரத நகரங்களை அமைப்பதற்கு எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரலாம். அந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தால் அதற்காக தனியான குழுவொன்றை நியமிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.எனவே, அதன் தன்மை என்னவென்று தெரியாவிட்டாலும் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்வதற்கு அவசியமான குழுவொன்றை நியமித்து அதன் பிராகரம் பெற்றுக்கொடுப்போம்.



புகையிரத நிலையங்கள் மாத்திரமின்றி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கீழ் இயங்கும் பயனுடைய கட்டடங்களை அவ்வாறு பெற்றுக்கொடுப்போம். ஜனாதிபதி செயலகத்துக்கே அந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, செயலகம் இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »