Our Feeds


Thursday, November 16, 2023

SHAHNI RAMEES

இந்தியப் படையை வெளியேற்றுவோம், சீனாவுக்கும் அனுமதியில்லை' - மாலைதீவு ஜனாதிபதி

 



மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம்

என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். 




இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான மாலைதீவில் புதிய ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் முகமது மூயிஸ் (சீன ஆதரவாளா்), வரும் நாளை வெள்ளிக்கிழமை (நவ. 17) பொறுப்பேற்க உள்ளார். 




அந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வெற்றி பெறுவதற்குத் தேவையான 50-க்கும் மேற்பட்ட சதவீத வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை.




அதையடுத்து, முதல் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய ஜனாதிபதி முகமது சோலீக்கும் (இந்திய ஆதரவாளா்), முகமது மூயிஸுக்கும் இடையே இறுதிக்கட்ட தோ்தல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது.




இதில், இந்தியாவுக்கு ஆதரவானவராக அறியப்படும் ஜனாதிபதி முகமது சோலீ 45.96 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றாா். சீனாவுக்கு சாதகமானவராகக் கருதப்படும் முகமது மூயிஸுக்கு 54.04 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதையடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது மூயிஸ் அறிவிக்கப்பட்டாா். 




கடந்த ஆட்சியிலேயே ஜனாதிபதி சோலீ அளவுக்கதிமாக இந்தியாவுக்கு இடமளிப்பதாக மூயிஸ் குற்றம் சாட்டி வந்தாா். 




இந்நிலையில், ஜனாதிபதி தோ்ந்தெடுக்கப்பட்டால், இந்திய இராணுவத்தினரை திருப்பி அனுப்பப் போவதாகவும், தற்போது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் இருதரப்பு வா்த்தகத்தை சமன்படுத்தப்போவதாகவும் தோ்தல் பிரசாரத்தின்போது முகமது மூயிஸ் வாக்குறுதி அளித்திருந்தாா். 




அதன்படியே செய்தியாளர்களிடம் பேசிய முகமது மூயிஸ், 'மாலைதீவில் இருந்து இந்திய இராணுவப் படையை வெளியேற்றுவோம், பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த அந்நிய நாட்டுப்படையையோ உள்ளே அனுமதிக்கமாட்டோம்' என்று தெரிவித்துள்ளார். 




'மாலைதீவைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் நலன்களுக்கு முதலிடம் கொடுப்பது மிகவும் அவசியம். மேலும் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம், நல்ல நேர்மையான நட்புறவைக் கொண்டிருக்க விரும்புகிறோம்.




இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுடன் மாலைதீவின் வெளியுறவுக் கொள்கையை ஈடுபடுத்த விருப்பம் இல்லை, புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொள்ள மாலைதீவு மிகவும் சிறியது' என்றார். 




மேலும், சீனாவுடன் தான் நெருக்கமாக இருப்பதாகக் கூறிய கருத்தை நிராகரித்த அவர், தான் மாலைதீவுக்கு மட்டுமே ஆதரவானவர் என்று குறிப்பிட்டார். 




மேலும் இந்தியா, சீனா மற்றும் பிற அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றப் போகிறோம் என்றும் முதற்கட்டமாக இந்திய இராணுவத்தைத் திரும்பப் பெறுவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »