வாகன விபத்து தொடர்பான குற்றஞ்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எம்.பி.யான ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சுயாதீன எதிரணி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர ஆகியோர் சபையில் வலியுறுத்தினர்
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்த சுயாதீன எதிரணி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில்,
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இந்த சபையில் அனுமதிக்கப்பட்டு, சபாநாயகராகிய நீங்கள் அதில் கைச்சாத்திட்டிருந்திருந்தீர்கள். இதுவரை காலமும் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது குறித்த சட்டத்தின் பிரகாரம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமானது . அதன் பிரகாரம் வாகன விபத்து குற்றச் சாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எம்.பி.யான ஸ்ரீரங்கா பிணை பெற்றுக்கொள்வதற்காக நீதிவான் நீதிமன்றத்துக்கு பல தடவைகள் சென்றுள்ளார்.
ஆனால் இந்த பிணையை மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே பெற்றுக் கொள்ள முடியும் என அவருக்கு அங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிவான் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்துக்கு நீங்கள் கைச்சாத்திட்ட பின்னர் நீதி அமைச்சர் அதில் கைச்சாத்திடவில்லை என தெரிவித்து, அவர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.
அதேநேரம் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் முன்னாள் எம்.பி.ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இழுத்தடிக்கப்பட்டு வருவதால் கடந்த 8 மாதங்களாக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இது அவரின் மனித உரிமை மீறலாகும். அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கூறுகையில்,., முன்னாள் எம்.பி. ஸ்ரீரங்கா வாகன விபத்தொன்றுக்காகவே சிறை வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்கும் செயற்பாட்டில் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களம் விசேட சட்டத்தரணி ஒருவரை அவரின் விடயத்தில் நியமித்திருக்கிறது. இது ஒருபோதும் இடம்பெறாத ஒன்று. ஸ்ரீரங்கா உயர் குருதி அழுத்த நோய்க்கு ஆளாகி இருக்கிறார். அவரைப்பார்க்க அவரது தாய் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார். எனவே அவரது விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.