Our Feeds


Monday, November 27, 2023

Anonymous

நீர்கொழும்பு சிறையில் தூக்கிட்டுக்கொண்ட ராகலை நபர் – நடந்தது என்ன?

 



நீர்கொழும்பு பொலிஸாரால் இராகலை நகரில் வைத்து கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட ஹார்ட்வெயார் ஒன்றின் உரிமையாளர்  நீர்கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் இராகலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இராாலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 40) என்ற குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக இவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் நீர் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள உயிரிழந்தவரின் மனைவி வடிவேல் விஜயகௌரி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக வைத்தியசாலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.


 இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.


இராகலை தோட்டம் மத்தி பிரிவை சேர்ந்தவர் கோவிந்தசாமி கிருஷ்ணகுமார். இவர் சுமார் எட்டு வருடங்களாக இராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.


இவர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் தனது கடைக்கு சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கடனாக பெற்றுள்ளார்.


இவர் பெற்ற கடனை செலுத்துவதில் முறன்பாடுகள் ஏற்பட்ட நிலையில் இவருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு வர்த்தகருக்கு வழங்கப்பட வேண்டிய கடன் பணம் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.


இருப்பினும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழக்காளியான கோ.கிருஸ்ணகுமார் இரண்டுமுறை ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதி மன்றம் பிடிவராந்து பிறப்பித்துள்ளது.


இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் கடந்த (23.11.2023) வியாழக்கிழமை அன்று இராகலை நகருக்கு கார் ஒன்றில் வருகை தந்து ஹாட்வெயார் வர்த்தரான கிருஸ்ணகுமாரை கைது செய்து அவரை இராகலை பொலிஸ் நிலையத்தில் ஆஜர் செய்துள்ளனர்.


பின் இராகலை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கிருஸ்ணகுமாரை வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவரை (29.11.2023) வரை விளக்கமறியலில் வைக்க நீதனான் உந்தரவிட்டுள்ளார்.


இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் பதுளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


இந்த நிலையில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பதுளை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட குடும்பத்தார் கிருஸ்ணகுமாருக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.


அதேநேரத்தில் தன்னை புதன்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்வார்கள் அங்கு என்னை பிணையில் நடவடிக்கை எடுங்கள் என கிருஸ்ணகுமார் தெரிவித்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.


இந்த நிலையில் (26.11.2023) இரவு இராகலை பொலிஸார் இருவர் கிருஸ்ணகுமாரின் வீட்டுக்கு வருகை தந்து கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து கிருஸ்ணகுமாரின் மனைவி விஜயகௌரி, மற்றும் கிருஸ்ணகுமாரின் சகோதரர்கள் இருவர் இன்று (27.11.2023) அதிகாலை நீர்கொழும்புக்கு சென்று வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைககாக வைக்கப்பட்டிருந்த கிருஸ்ணகுமாரின் உடலை பார்வையிட்டு அங்கு சம்பவம் தொடர்பாக மரண விசாரணைக்காக வருகை தந்திருந்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் முன் அடையாளம் காண்பித்துள்ளனர்.


இதன்போது தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக கிருஸ்ணகுமாரின் மனைவி நீதவானிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு பொலிஸார் விரைவாக அறிக்கை சமர்பிக்குமாறும் சடலத்தை பிரேத பரிசோதணையின் பின் உறவினர்களிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


(ஆ.ரமேஸ்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »