Our Feeds


Monday, November 13, 2023

SHAHNI RAMEES

இடைக்கால நிர்வாக குழுவுக்கு எதிரான தடையுத்தரவை நீக்கக்கோரி ரொஷான் ரணசிங்க மனு தாக்கல்!

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்காக நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்குமாறு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார். 



குறித்த தடை உத்தரவு தொடர்பான ஆட்சேபனைகள் அடங்கிய பிரேரணை, சட்டத்தரணி ஜீ.ஜி. அருள்பிரகாசம் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்காக நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் கடந்த 7 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 14 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 



ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்ததையடுத்துது மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்தது.



இதன்படி, இந்த விடயம் தொடர்பாக மொத்தமாக மூன்று தடை உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவை நியமித்து விளையாட்டு அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியை இடைநிறுத்துவது, அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழு உறுப்பினர்கள் குறித்த பதவிகளில் செயற்படுவதை தடுப்பது, மனுதாரர் மற்றும் கிரிக்கெட் நிறுவனத்தின் மற்றைய அதிகாரிகளின் நடவடிக்கைகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் தலையிடுவதை தடுப்பது உள்ளிட்ட மூன்று தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.



விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழுவை இடைநிறுத்தி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்தார்.



இலங்கை தேசிய அணியின் சமீபத்திய தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் தெரிவுக் குழு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.



இதேவேளை, நாட்டின் கிரிக்கெட்டை மீண்டும் இலங்கை ரசிகர்களால் விரும்பப்படும் விளையாட்டாக மாற்றியமைப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, நாட்டின் மீது ஆர்வமுள்ள வீரர்கள் குழுவை உருவாக்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »