Our Feeds


Thursday, November 2, 2023

SHAHNI RAMEES

'ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அவசியம்' - அமெரிக்க ஜனாதிபதி

 



இஸ்ரேல் - ஹமாஸ் இரு தரப்புகளுக்கும் இடையில் இடம்பெறும்

போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.




பலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. ஹமாஸ்  முக்கிய தலைவர்களை குறி வைத்து அழிக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் இராணுவம் கண்மூடித்தனமாக காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.




இஸ்ரேல் தாக்குதலில் அதிகமாக அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைகூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


இதனால் காசா பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் சுமார் 200 பேர் அடங்கிய பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ஒரு பெண் அவர் பேச்சில் குறுக்கிட்டு, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன், 'ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் இடை நிறுத்தம் தேவை. பணயக் கைதிகளை மீட்பதற்கு கால அவகாசம் தேவை' என தெரிவித்துள்ளார். 




ஜனாதிபதி பைடனின் பேச்சு வைரலான நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 




'வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்' என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.




காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல், 3,648 குழந்தைகள் உட்பட, 8,796 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 195 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »